Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 26 மே (ஹி.ச.)
த.வெ.கவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து ஆட்சியில் பங்கெடுத்துள்ளதாகவும், மக்களின் தீர்ப்பின் மூலம் முதலமைச்சரான திரு. சி. ஜோசப் விஜய் சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகவும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவதில் கூட்டணி கட்சியாக காங்கிரஸ் நிச்சயமாக துணைநிற்கும். ஆனால், அதற்காக த.வெ.க தேர்வு செய்யும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் ஆதரிக்க முடியாது. அவை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்; பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
மேலும், “தோழமை சுட்டுதல்” என்ற அடிப்படையில் மாற்றுக் கருத்துகள் இருந்தால் அதை வெளிப்படையாக கூறுவது அரசியல் மற்றும் தார்மீக ரீதியில் சரியானது என்றும் ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.
குதிரைப்பேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது என தெரிவித்துள்ள அவர், இந்தியாவில் ஜனநாயகத்தையும் காங்கிரஸ் கட்சியையும் பலவீனப்படுத்த பாஜக பயன்படுத்திய முக்கிய ஆயுதமே குதிரைப்பேர அரசியல் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்கள் தேர்ந்தெடுத்த பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை அல்லது ஆட்சியில் நீடிப்பதை பாஜக குதிரைப்பேரம் மூலம் தடுத்துள்ளதாக கூறியுள்ள ஜோதிமணி, தமிழ்நாட்டில் ஆதரித்து, மற்ற மாநிலங்களில் எதிர்க்கும் இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் ஒருபோதும் எடுக்காது என வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் செயல்பாடுகள் காந்தி, நேரு மற்றும் காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிரான வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும் என்றும், தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்து வரும் கொள்கைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற்சியையும் ஏற்க முடியாது என்றும் ஜோதிமணி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam