Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 மே (ஹி.ச.)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அகமதாபாத்தின் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சர்வதேச எல்லை பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக மே 28-ம் தேதி குஜராத் வருகை தரவுள்ளார்.
அகமதாபாத்தில், சர்க்யூட் ஹவுஸில் நடைபெறும் கூட்டத்திற்கு அமைச்சர் ஷா தலைமை தாங்குகிறார்.
இதில் மூத்த அதிகாரிகள் நகரின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து விளக்கமளிக்க உள்ளனர். உள்கட்டமைப்பு திட்டங்கள், போக்குவரத்து மேலாண்மை மற்றும் நகர்ப்புற வசதிகள் மீது இந்த ஆய்வு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நியமிக்கப்பட்ட பாஜக நிர்வாகிகளையும் அவர் சந்திக்கக்கூடும்.
மே 29-ம் தேதி, எல்லை பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய புஜ் செல்லும் அமித் ஷா, சர்வதேச எல்லையை ஒட்டிய முக்கியத்துவம் வாய்ந்த ஹராமினாலா பகுதிக்கும் செல்கிறார்.
எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அமைப்புகளை சந்தித்து, தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதுடன், மூத்த அதிகாரிகளுடன் ஒட்டுமொத்த நிலவரம் குறித்து விவாதிக்கவும் உள்ளார்.
குஜராத் பயணத்தில் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் உள்துறை அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்துவார்.
மேலும், இன்று இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள சஞ்சு BSF முகாமுக்கு அமைச்சர் ஷா வருகை தருகிறார்.
அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள BSF வீரர்களுடன் கலந்துரையாடி, கடுமையான மற்றும் தொலைதூர பகுதிகளில் பணிபுரியும் துருப்புகள் எதிர்கொள்ளும் செயல்பாட்டு சவால்கள் மற்றும் நிலைமைகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ள உள்ளார்.
கடினமான பணிகளில் ஈடுபடும் படையினரின் மன உறுதியை உயர்த்தவும், நலனை உறுதி செய்யவும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, படையினரின் வாழ்க்கை மற்றும் பணி நிலைமைகளை மேம்படுத்தும் நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
இன்றைய தினம் பிற்பகுதியில், பிகானேரில் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்திற்கு ஷா தலைமை தாங்குகிறார்.
எல்லையோர மாவட்டங்களின் பாதுகாப்பு நிலவரத்தை மதிப்பிடுவதற்கான இக்கூட்டத்தில், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ராஜஸ்தான் அரசின் பிரதிநிதிகள், BSF-ன் மூத்த அதிகாரிகள் மற்றும் எல்லையை ஒட்டிய ஐந்து மாவட்டங்களின் நிர்வாக மற்றும் காவல்துறை தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஒருங்கிணைப்பு அமைப்புகள், உளவுத் தகவல் பரிமாற்றம் மற்றும் எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது.
Hindusthan Samachar / vidya.b