பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் சோறு போடும் விவசாயிகளுக்கு தமிழக அரசு பிச்சை போட்டுள்ளது - தவாக வேல்முருகன் குற்றச்சாட்டு
சென்னை, 26 மே (ஹி.ச.) தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழக அரசு நேற்று கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்கு குறு, சிறு, பெரு விவசாயிகள் எனப் பிரித்து தள்ளுபடி அறிவித்துள்ளது. ஆனால் இது உண்மையான கடன் தள்ளுபடி அல்ல, விவசாயிகள
Velmurugan


Hh


சென்னை, 26 மே (ஹி.ச.)

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழக அரசு நேற்று கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்கு குறு, சிறு, பெரு விவசாயிகள் எனப் பிரித்து தள்ளுபடி அறிவித்துள்ளது.

ஆனால் இது உண்மையான கடன் தள்ளுபடி அல்ல, விவசாயிகளை கேவலப்படுத்தும் வகையில் பிச்சை போடப்பட்ட திட்டம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர்

தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெற்ற பயிர்க்கடன்களில், குறு விவசாயிகளுக்கு ₹50,000 வரை முழு தள்ளுபடி, சிறு விவசாயிகளுக்கு அதே அளவுக்கான கடனில் 50% தள்ளுபடி, மேலும் ₹50,000 முதல் ₹1 லட்சம் வரையிலான கடன்களுக்கு ₹5,000 முதல் ₹40,000 வரை மட்டுமே தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், அரசுக்கு ₹2,044.46 கோடி கூடுதல் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில், “5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடன்களில் 50% தள்ளுபடி வழங்கப்படும் என உறுதியளித்திருந்தது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொகை அந்த வாக்குறுதிக்கு முற்றிலும் முரணானது என வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

மூலதனச் செலவு உயர்வு, இடுபொருள் விலையேற்றம், பருவநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள், நீர் பற்றாக்குறை, விளைச்சல் குறைவு மற்றும் போதுமான விலை இல்லாமை போன்ற காரணங்களால் விவசாயிகள் கடுமையான நெருக்கடியில் உள்ளனர்.

இந்நிலையில் இந்தத் தள்ளுபடி அறிவிப்பு அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 4,473 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் கரும்பு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு சராசரியாக ₹60,000, நெல் விவசாயிக்கு ₹36,000 வரை பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.

இரண்டு ஏக்கர் கரும்பு அல்லது மூன்று ஏக்கர் நெல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிக்கு வெறும் ₹5,000 மட்டுமே கிடைப்பது “தள்ளுபடி” அல்ல, “பிச்சை” என அவர் விமர்சித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ₹12,000 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது. அதற்கு முந்தைய காலத்தில் ₹7,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது வெறும் ₹2,000 கோடி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் மீது நம்பிக்கை வைத்திருந்த விவசாயிகளுக்கு இது நம்பிக்கைத் துரோகமாக அமைந்துள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதியின்படி முழுமையான கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

தள்ளுபடி என்ற பெயரில் சோறு போடும் விவசாயிகளை பிச்சையிட்டு கேவலப்படுத்த வேண்டாம்” என்று கடும் கண்டனத்துடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ