Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மே (ஹி.ச.)
விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில்,
எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக அரசு செயல்பட்டு வருவதாகவும், பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் “விஞ்ஞான ஏமாற்று வேலை” அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை கட்டுப்படுத்த தவறிவிட்டு, குதிரைப்பேர அரசியலில் ஈடுபட்டிருக்கும் அரசு, மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது நில அளவை அடிப்படையாக எடுக்காமல் கடன் தொகையை அடிப்படையாக வைத்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை என்றும் விமர்சித்துள்ளார்.
தனது தலைமையிலான அதிமுக அரசு 2021ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்ததாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அதனுடன் ஒப்பிடுகையில், தற்போதைய அரசு 2026ஆம் ஆண்டில் வெறும் ரூ.2,044 கோடி கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்திருப்பது “தில்லுமுல்லு” என்பதை விவசாயிகள் புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், “விவசாயிகளை ஏமாற்றும் எந்த அரசும் வரலாற்றில் நிலைத்ததில்லை” எனத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை ஏமாற்றாமல், வாக்குறுதிப்படி செயல்பட வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam