சிஎன்ஜி விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் - திமுக குற்றச்சாட்டு
சென்னை, 26 மே (ஹி.ச.) திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சிஎன்ஜி (Compressed Natural Gas) விலை உயர்வுக்கு பிரத
சிஎன்ஜி விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் -  திமுக குற்றச்சாட்டு


சென்னை, 26 மே (ஹி.ச.)

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

சிஎன்ஜி

(Compressed Natural Gas) விலை உயர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு குறைத்ததே தற்போதைய விலை உயர்வுக்கு முக்கிய காரணம் .

சென்னையில் சில்லறை விற்பனை சிஎன்ஜி விலை ஒரு கிலோவுக்கு ரூ.95-ஆக உயர்ந்ததுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் இயக்கச் செலவுகளால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வந்திருந்தால், அது போர் மண்டலம் வழியாக அல்லாமல் வேறு பாதுகாப்பான வழியில் தடையின்றி நமக்குக் கிடைத்திருக்கும். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கச்சா எண்ணெய் வரத்து குறைந்ததால் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. டிரம்பின் அழுத்தத்திற்கு மோடி அடிபணிந்துவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் சிஎன்ஜி விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள், மீட்டர் கட்டணத்தை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், தற்போதைய கட்டண அமைப்பில் வாகனம் இயக்குவது சாத்தியமில்லை. எரிபொருள் செலவே வருமானத்தில் பெரும்பகுதியை விழுங்கிவிடுகிறது. கட்டணத்தை சீரமைக்காவிட்டால் தொழிலைத் தொடர முடியாது என தெரிவித்தனர்.

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சந்தைகள் கடும் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றன. இந்த சர்வதேச நெருக்கடியின் எதிரொலியாகவே உள்நாட்டிலும் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாக எரிசக்தி துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த விலை உயர்வு பொதுப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, தளவாடத் துறை மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் மாதாந்திர செலவினங்களிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வாகனங்களுக்கு சிஎன்ஜி பயன்படுத்தும் தனிநபர்கள் முதல், சமையல் எரிவாயுவாக பயன்படுத்தும் வீடுகள் வரை அனைத்து தரப்பினரும் இதனால் பாதிக்கப்படுவர் என கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b