Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 26 மே (ஹி.ச.)
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது பட்டப்பகலில் மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவை மாவட்டம் கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தபோது, கார்த்திக் என்ற மாரியப்பனுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். சென்னைச் சேர்ந்த கார்த்திக், கோவை சாய்பாபா காலனி பகுதியில் தங்கி இருந்ததாகவும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதை அறிந்த இளம்பெண் அவருடன் பேசுவதை நிறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, தொடர்ந்து பேசும்படி கார்த்திக் அந்த இளம்பெண்ணை தொந்தரவு செய்து வந்ததாகவும், அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று கார்த்திக் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனங்களில் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்து, குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், மண்ணெண்ணெய் பாட்டில்களை சரமாரியாக வீசிவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், பட்டப்பகலில் நடந்த இந்த வன்முறை அராஜகம் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மேலும், சூலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள், மீண்டும் இத்தகைய சம்பவம் நடைபெற்றிருப்பது கவலைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, கோவையில் அதிகரித்து வரும் வன்முறை கலாசாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ