Enter your Email Address to subscribe to our newsletters

கூடலூர், 27 மே (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாக்கானா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நிஷாப், நேற்று மாலை வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது, திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை அவரை தாக்கியது. பலத்த காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சிறுவனின் மரணச் செய்தி பரவியதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று காலை முதல் கூடலூர்-வயநாடு சாலையின் முக்கட்டி பகுதியில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. பேருந்துகள், லாரிகள், கார்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில்,
கூடலூர் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயிர்களை சேதப்படுத்துவதுடன், தற்போது மனித உயிர்களையும் பறிக்கத் தொடங்கியுள்ளன. எனவே, வனத்துறை உடனடியாக தலையிட்டு கிராம எல்லைகளில் யானை தடுப்பு அகழிகள், சூரிய மின்வேலிகள் அமைக்க வேண்டும். ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி மக்களின் உயிர், உடைமைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், என வலியுறுத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
Hindusthan Samachar / vidya.b