Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மே (ஹி.ச.)
அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி – சி.வி. சண்முகம் தலைமையிலான அதிருப்தி அணியும் இடையே சமாதான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
சில எம்.எல்.ஏ.க்கள் அணி மாறியதால், தனிக் குழுவாக செயல்படும் வாய்ப்பு குறைந்த நிலையில், பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, வேலுமணி தரப்பைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்டோர், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கட்சிப் பதவிகள் மீண்டும் வழங்கப்பட்டால் பழனிசாமி தலைமையை ஏற்கத் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்ததாகவும், அதற்கு பழனிசாமி அமைப்பு செயலர் உள்ளிட்ட சில பொறுப்புகள் வழங்க முடியும் என தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், மூத்த நிர்வாகிகளின் தலையீட்டின் பின்னர் சமாதான பேச்சு தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியுடன் எஸ்.பி. வேலுமணி – சி.வி. சண்முகம் தரப்பு இன்று பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரப்பூர்வமாக இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இரு அணியை சேர்ந்தவர்களும் தாங்கள் சபாநாயகர் இடம் அளித்த கடிதத்தை திரும்பப் பெறவும் வாய்ப்புள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P