Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 27 மே (ஹி.ச.)
புதுச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
தமிழகத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, தமிழக வெற்றி கழகத்தில் இணைத்திருப்பது ஜனநாயக படுகொலை என அவர் கடுமையாக விமர்சித்தார். இதனை பாமக வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
மக்கள் விருப்பத்திற்கு எதிராக, எந்த காரணமும் இன்றி வெற்றி பெற்ற சில நாட்களிலேயே அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி மாறியிருப்பது ஜனநாயக படுகொலை மட்டுமல்ல, அரசியல் மோசடி என்றும் அன்புமணி குற்றம்சாட்டினார். தமிழக மக்கள் இதனை ஏற்கமாட்டார்கள் என்றும் கூறினார்.
இது இளைஞர்களுக்கு எதிரான செயல் என்றும், குதிரை பேரத்தை விட மோசமான அரசியல் நடவடிக்கை என்றும் விமர்சித்த அவர், வெற்றி பெற்று 20 நாட்களிலேயே ராஜினாமா செய்து மற்றொரு கட்சியில் சேர்வது நல்ல முன்னுதாரணம் அல்ல என்றார். மக்கள் தீர்ப்புக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு இடைத்தேர்தல் வந்தால், அந்த 4 வேட்பாளர்களும் தோல்வியடைவார்கள் என்றும், தேவையானால் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேட்பாளர்களை நிறுத்தும் நிலை உருவாகலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும், சமூக நீதிக்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக முதலமைச்சரை சந்தித்தபோது கோரிக்கை வைத்ததாகவும், அது அரசின் முதன்மை பணியாக இருக்க வேண்டும் என்றும் அன்புமணி கூறினார்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்புக்காக டிஜிபி தலைமையில் தனித்தனி குழுக்கள் அமைக்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும், வாக்கெடுப்பை பாமக எதிர்க்கவில்லை; அதே நேரத்தில் ஆதரிக்கவும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
இடஒதுக்கீடு, மதுபானக் கடைகள், மணல் கொள்ளை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசு அளித்த வாக்குறுதிகள் பாமக வலியுறுத்திய கோரிக்கைகளே என்பதால், வாக்கெடுப்பில் பாமக நடுநிலை வகித்ததாக அன்புமணி தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P