Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 27 மே (ஹி.ச.)
ராமநாதபுரத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு ஆட்டுச் சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு குவிந்தன.
சில மணி நேரங்களிலேயே சுமார் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.
நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் இன்று சிறப்பு ஆட்டுச் சந்தை நடைபெற்றது.
இந்த சந்தைக்கு ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடி, கீழக்கரை, உச்சிப்புளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், வழக்கத்தை விட ஒவ்வொரு ஆட்டுக்கும் சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் விலை கிடைத்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதிகாலை 5 மணிக்கே தொடங்கிய சந்தையில், வாங்குவோர் மற்றும் விற்பனையாளர்கள் அதிக அளவில் திரண்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் தரம் மற்றும் எடைக்கு ஏற்ப ஆடுகள் பல ஆயிரம் ரூபாயில் இருந்து லட்சக்கணக்கில் வரை விற்பனையானதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பக்ரீத் பண்டிகைக்காக நல்ல தரமான ஆடுகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டியதால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
சில மணி நேரங்களிலேயே சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறப்பு ஆட்டுச் சந்தை காரணமாக ராமநாதபுரம் பகுதியில் திருவிழா போன்ற சூழல் நிலவியது.
Hindusthan Samachar / ANANDHAN