சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்
சென்னை, 27 மே (ஹி.ச.) சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில், பெரும் அளவு போதை பொருட்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏ
Chennai International Airport


சென்னை, 27 மே (ஹி.ச.)

சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில், பெரும் அளவு போதை பொருட்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானம், நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்திருந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 27 வயது ஆண் பயணி மீது, ஏர் இன்டலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அதிகாரிகள் அந்த கேரள பயணியை நிறுத்தி விசாரித்தனர்.

அந்தப் பயணி கேரளாவில் இருந்து சுற்றுலா பயணி விசாவில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தாய்லாந்து நாட்டிற்கு சென்றிருந்தவர், இப்போது சென்னைக்கு திரும்பி வந்து வந்திருந்தார். அவரை அதிகாரிகள் விசாரித்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதை அடுத்து, அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது.

கேரள பயணியை வெளியில் விடாமல், அவரையும் அவர் கொண்டு வந்த உடமைகளையும், விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பரிசோதித்தனர். அப்போது அவருடைய சூட்கேசுக்குள் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் பாக்கெட்டுகள், சாக்லேட் பார்சல்கள், ஏராளமாக இருந்தன. அந்த பார்சல்களுக்கு இடையே 10 பிளாஸ்டிக் பார்சல்கள் இருந்தன. அந்தப் பார்சல்களை பிரித்து பார்த்த போது, அதனுள் உயர்ரக ஹைட்ரோபோனிக் போதை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

அந்தப் பார்சல்களில் மொத்தம் 10 கிலோ 114 கிராம் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப் பொருள் இருந்ததை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள், கேரள பயணியை, போதைப் பொருட்கள் கடத்தல், மற்றும் சுங்கத்துறை சட்டத்தில் கைது செய்தனர்.

அதோடு அந்த பயணியிடம் மேலும் விசாரணை நடத்திய போது, இந்தப் போதைப் பொருட்கள் அடங்கிய பார்சல்களை பாங்காக் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மர்ம ஆசாமிகள் 2 பேர் கொடுத்ததாகவும், சென்னை விமான நிலையத்தில் இந்த பார்சல்களை, எங்களுடைய நண்பர்கள் இருவர் வாங்கிக் கொண்டு, ரூ.1 லட்சம் பணம் கொடுப்பார்கள் என்று ஆசை காட்டியதால், இந்த கேரளா இளைஞர் பண ஆசையில் இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாக தெரிய வந்தது.

இதை அடுத்து கைது செய்யப்பட்ட கேரள இளைஞரை சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதோடு இந்த ரூ.10 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சாவை, சென்னை விமான நிலையத்தில் இந்த இளைஞரிடம் வாங்க இருந்த 2 மர்ம ஆசாமிகள் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN