Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மே (ஹி.ச.)
சென்னை கோடம்பாக்கத்தில் தனியாக வசித்து வந்த பெண்ணிடம் போலீஸ் என போலியாக நடித்து நகை மற்றும் பணம் பறித்த சம்பவத்தில், ஊர்க்காவல் படை காவலர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோடம்பாக்கம் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த செல்வி (53) என்பவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரது மகன் சரண் டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 23ஆம் தேதி, போலீஸ் சீருடை அணியாமல் வந்த ஐந்து பேர், “உங்கள் மகன் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்; கைது செய்ய வேண்டும்” என கூறி வீட்டுக்குள் நுழைந்து மிரட்டியுள்ளனர்.
பின்னர் வீட்டை சோதனை செய்த கும்பல், செல்வி அணிந்திருந்த நகைகளை பறித்துச் சென்றதுடன், “அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும்; இல்லையெனில் உங்கள் மகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என மிரட்டியதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர், செல்போனில் தொடர்பு கொண்டு 70 ஆயிரம் ரூபாய் கேட்டு, விருகம்பாக்கம் பகுதியில் பணத்தையும் பெற்றுச் சென்றுள்ளனர். தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் அச்சமடைந்த செல்வி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரவீன் சுகுமார் (41), அம்பத்தூரை சேர்ந்த சக்திவேல் (32), போரூரை சேர்ந்த ரஞ்சித் (49) ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் பிரவீன் சுகுமார் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருவதும், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், முன்னாள் காதலியின் குடும்பத்தை பழிவாங்கும் நோக்கில், சக்திவேல் சரண் குறித்து தவறான தகவலை வழங்கியதாகவும், அதனைத் தொடர்ந்து கும்பல் போலீஸ் போல நடித்து இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்து பறிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள உமர் மற்றும் மோனீஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam