நேரு நினைவு நாள் நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல் - தண்டையார்பேட்டையில் பரபரப்பு
சென்னை, 27 மே (ஹி.ச.) சென்னை தண்டையார்பேட்டையில் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிப்பதில் காங்கிரஸ் கட்சியின் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜவஹர்லால் நேருவின் நினைவு ந
காங்கிரஸ்


சென்னை, 27 மே (ஹி.ச.)

சென்னை தண்டையார்பேட்டையில் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிப்பதில் காங்கிரஸ் கட்சியின் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சென்னை தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே உள்ள காமராஜர் மற்றும் இந்திரா காந்தி சிலைகளுக்கு நடுவே நேருவின் புகைப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்காக வடசென்னை கிழக்கு முன்னாள் மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம் காவல்துறையினரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் அவர் மாலை அணிவிக்க வந்திருந்தார்.

அதே நேரத்தில், தற்போதைய வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மதாரம்மா கனி பாரூக்கும் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். இதனால், யார் முதலில் மாலை அணிவிப்பது என்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அனுமதி பெற்றிருந்ததால் எம்.எஸ். திரவியம் தரப்பினருக்கு காவல்துறையினர் மாலை அணிவிக்க அனுமதி வழங்கினர். ஆனால், தற்போதைய மாவட்ட தலைவர் என்ற முறையில் தாமே நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என மதாரம்மா கனி பாரூக் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, இரு தரப்பினரும் மாறி மாறி வாய் தகராறிலும், கைகலப்பிலும் ஈடுபட்டனர். ஒருவரின் சட்டையை ஒருவர் பிடித்து இழுத்து தள்ளும் நிலையும் ஏற்பட்டது. பின்னர், மதாரம்மா கனி பாரூக் தரப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். நேருவின் நினைவு நாளில் காங்கிரஸ் கட்சியின் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்ட சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / GOKILA arumugam