Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மே (ஹி.ச.)
சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான மற்றொரு அணி என அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டிருந்தது.
இதனிடையே, தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா, மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயகுமார் ஆகியோர் நேற்று முன் தினம் தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே இந்த மூன்று எம்எல்ஏக்களும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
அதனை தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் தவெகவில் இணைந்தார். இதன் மூலம், அதிமுகவின் எம்.எல்.ஏக்களின் பலம் 47இல் இருந்து 43ஆக குறைந்தது. சி.வி.சண்முகம் தரப்பின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 4 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது, அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தரப்பும் எஸ்.பி.வேலுமணி தரப்பும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் நீண்ட நாட்களாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி அறிவித்துள்ளார்.
எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கே.சி. வீரமணி, எல்லாம் முடிந்துவிட்டது. தாய், பிள்ளை எல்லாம் இனி ஒன்றாக இருக்கிறோம் என உருக்கமாக தெரிவித்தார்.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, காமராஜ், கே.சி. வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தீவிர ஆலோசனை நடத்தினர்.
இதற்கு முன்னதாக, தனது ஆதரவாளர்களுடன் எஸ்.பி. வேலுமணி தனியாக ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், சி.வி. சண்முகம் அலுவலகத்திற்கு மூத்த தலைவர்களான நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், லீமா ரோஸ் உள்ளிட்டோரும் வருகை தந்தனர். அதிமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் ஒரே இடத்தில் திரண்டிருப்பது கட்சி வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b