Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 27 மே (ஹி.ச..)
கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியில் இருந்து விலக உள்ளாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல் காந்தி அவர்களை சித்தராமையா சந்தித்து ஆலோசனை நடத்தியது இந்த விவாதத்திற்கு காரணமாகியுள்ளது.
கர்நாடகத்தில் 2023-ம் ஆண்டு இந்தியன் நேஷனல் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, முதல்வர் பதவிக்காக சித்தராமையா மற்றும் மாநில தலைவர் சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது.
இதையடுத்து, இரு தரப்பினருடனும் ஆலோசனை நடத்திய கட்சி மேலிடம், நீண்ட இழுபறிக்கு பிறகு சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியை வழங்கியது.
அப்போது, சித்தராமையா 2½ ஆண்டுகள் பதவி வகித்த பின் முதல்வர் பதவியை டி.கே.சிவக்குமாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற ரகசிய உடன்பாடு இருந்ததாக கூறப்பட்டது.
இது எழுத்துப்பூர்வமாக இல்லை என்றாலும், அதற்கு சித்தராமையா சம்மதித்ததாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், 2025 நவம்பர் மாதத்துடன் சித்தராமையா 2½ ஆண்டுகள் நிறைவு செய்ததை தொடர்ந்து, டி.கே.சிவக்குமார் தமக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுத்ததால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கட்சிக்கும், ஆட்சிக்கும் நெருக்கடி நிலை உருவானது. சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே வார்த்தை மோதலும் அதிகரித்தது.
இதையடுத்து, காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, கட்சி முடிவு எடுக்கும் வரை பொறுமையாக இருக்கும்படி டி.கே.சிவக்குமாருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சித்தராமையா டெல்லி சென்று ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தியது, கர்நாடகத்தில் தலைமை மாற்றம் விரைவில் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஆனால், முதல்வர் மாற்றம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA