Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 27 மே (ஹி.ச.)
கேரள மாநில முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) இன்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்தி வரும் எக்ஸாலோஜிக் (Exalogic) தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வீணா விஜயனின் நிறுவனம், கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டைல்ஸ் லிமிடெட் (CMRL) நிறுவனத்திடமிருந்து “கன்சல்டன்சி கட்டணம்” என்ற பெயரில் ரூ.1.72 கோடி முதல் ரூ.2.70 கோடி வரை தொகையை மாதாந்திர அடிப்படையில் பெற்றதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடான பணப் பரிமாற்றம் நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பில் பினராயி விஜயன் தங்கியிருக்கும் வீடு, கண்ணூரில் உள்ள அவரது வீடு, வீணா விஜயனின் கணவரும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸின் கோழிக்கோடு வீடு உள்ளிட்ட மொத்தம் 12 இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கேரள காவல்துறைக்கு முன் தகவல் அளிக்காமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரடியாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P