Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மே (ஹி.ச)
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி மற்றும் மொத்த கொள்ளளவு 1666.29 மில்லியன் கன அடி ஆகும். 26.05.2026 நிலவரப்படி அணையின் தற்போதைய நீர்மட்டம் 50 அடியாகவும், தற்போதைய கொள்ளளவு 1441.76 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணைக்கு தற்போது 744 கன அடி நீர் வரத்து உள்ளது.
தற்போது அணையிலிருந்து 300 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நீர்வரத்து மேலும் அதிகரித்தால் படிப்படியாக தண்ணீர் திறந்து விடப்படும் என்றும், இன்று இரவு 8 மணிக்குள் 1000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கிராமங்கள்:
பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சௌட்டஹள்ளி மற்றும் தளிஹள்ளி.
மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் தென்பெண்ணையாற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றுப்பகுதிக்கு கொண்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக மேல்பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ