Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 27 மே (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66வது பழக்கண்காட்சி இன்று துவங்கியது.
இந்த ஆண்டு கோடை சீசனின் இறுதி நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த பழக்கண்காட்சி, வரும் 30ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டைய கண்காட்சியில் சுமார் 5 டன் பல்வேறு வகை பழங்களை கொண்டு பிரம்மாண்டமான வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்காவின் நுழைவு வாயிலில் 1500 கிலோ பலாப்பழம், ஆப்பிள், சாத்துக்குடி, வாழைப்பழம், மாம்பழம், அன்னாசி, பப்பாளி உள்ளிட்ட பல்வேறு பழங்களை கொண்டு அலங்கார நுழைவாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜுராசிக் பார்க் கருப்பொருளில் பழங்களால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட வடிவங்கள் பார்வையாளர்களை கவர்கின்றன. குறிப்பாக பேரிச்சை பழங்களை கொண்டு டைனோசர், டைனோசர் முட்டை இனப்பெருக்க மையம், ஆர்கியோப்டெரிக்ஸ் பறவை, டிரைசெராடாப்ஸ் மற்றும் பிராக்சியோசாரஸ் போன்ற உருவங்கள் வடிவமைக்கப்பட்டு கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தோட்டக்கலைத் துறையினரும் தங்களது மாவட்டங்களின் சிறப்புகளை பிரதிபலிக்கும் வகையில் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அரங்குகளை அமைத்துள்ளனர். பறவைகள், அணை, வீணை உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இந்த பழக்கண்காட்சியை காண நான்கு நாட்களும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam