Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மே (ஹி.ச)
போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பொதுமக்கள் எளிதாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் வாகனங்களுக்கான முன்பதிவு எண்களை பொது ஏல முறையில் பெறுவது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாக்களின் கட்டண நிர்ணயம் தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் விரைவில் கலந்தாய்வு கூட்டம் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல், வாகனங்களை நிகழ்நேரத்தில் கண்காணித்தல் மற்றும் அவசரகால உதவியை விரைவுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், AIS-140 விதிகளின்படி Vehicle Location Tracking Device (VLTD) பொருத்தும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பயணிகள் வாகனங்கள் மற்றும் பொதுச் சேவை வாகனங்களில் AIS-140 VLTD சாதனங்கள் பொருத்தும் திட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில், லாரி உரிமையாளர்கள் சங்கங்கள், பள்ளி வாகன உரிமையாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் VLTD சாதனங்களின் விலை தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அத்துடன், VLTD சாதனங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு மற்றும் AIS-140 திட்டத்தின் செயலாக்க நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தி விபத்துகளை குறைக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் போக்குவரத்து ஆணையர் பாஸ்கர பாண்டியன், கூடுதல் போக்குவரத்து ஆணையர் சிவகுமரன் மற்றும் இணைப் போக்குவரத்து ஆணையர் பொன்.செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ