Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 27 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி (ஏபிசிசி) தலைவரான ஒய்.எஸ். ஷர்மிலாவிற்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கும் விவகாரம் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி முன்னதாக அளித்திருந்த வாக்குறுதியின் அடிப்படையில், ஷர்மிலாவை ராஜ்யசபாவுக்கு அனுப்பும் முயற்சிகள் தற்போது வேகமடைந்துள்ளன.
குறிப்பாக கர்நாடக மாநிலத்திற்கு கிடைக்கும் மூன்று ராஜ்யசபா இடங்களில் ஒன்றை அவருக்கு ஒதுக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இடங்களுக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பி.கே. ஹரிபிரசாத், ராஜீவ் கவுடா ஆகியோரின் பெயர்கள் முன்வந்துள்ளன.
மேலும், தேசிய அளவிலான காங்கிரஸ் தலைவர்கள் பவன் கேரா, சுப்ரியா ஸ்ரீநதே ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. இவர்களுடன் ஷர்மிலாவின் பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினராக இருந்த பரிமல் நத்வானியின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.
அவர் மீண்டும் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை சுயேட்சையாக வெற்றி பெற்ற அவர், இம்முறை பாரதீய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் காலியாக உள்ள இரண்டு ராஜ்யசபா இடங்களில் ஒன்றிற்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து பெண் வேட்பாளரை நிறுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு இடத்தை கைப்பற்ற காங்கிரஸ் முயற்சி செய்தாலும், தேவையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் சிக்கல் நிலவி வருகிறது.
ஒரு ராஜ்யசபா இடத்தை வெல்ல குறைந்தது 24 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகின்ற நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு அந்த அளவு பலம் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA