Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 27 மே (ஹி.ச.)
செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள்கோவிலில் அமைந்துள்ள பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயிலில் நடைபெற்ற வைகாசி பெருவிழா தேரோட்டம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் விமர்சையாக நடைபெற்றது.
சிங்கப்பெருமாள்கோவிலில் உள்ள பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில், மலையை குடைந்து ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட சிறப்பு மிக்க தலமாகும். இங்கு முக்கண்ணோடு அமர்ந்த கோலத்தில் நரசிம்ம பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
நிகழ் ஆண்டிற்கான வைகாசி பெருவிழா கடந்த மே 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் நரசிம்ம பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் 7ஆம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.
மங்கள வாத்தியங்கள் முழங்க, அகோபிலவள்ளி தாயார் சமேத நரசிம்ம பெருமாள் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அப்போது “கோவிந்தா... கோவிந்தா...” என பக்தர்கள் முழக்கமிட்டு பக்தி பரவசத்தில் ஈடுபட்டனர். தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து பெருமாளின் ஆசியைப் பெற்றனர்.
பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு நீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது.
தேரோட்டத்தையொட்டி சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P