Enter your Email Address to subscribe to our newsletters

ஆம்பூர், 27 மே (ஹி.ச)
பெங்களூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து, இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் ஆம்பூர் புறவழிச்சாலை அருகே நிலை தடுமாறி சாலையோரம் இருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கனமழை காரணமாக சாலை வழுக்கியதா அல்லது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விபத்து நடந்த சில நிமிடங்களில் அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் இணைந்து பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர்.
விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் ஆம்பூர் அரசு மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. எலும்பு முறிவு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
ஆம்பூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்கான சரியான காரணம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பேருந்தின் வேகம், பராமரிப்பு குறைபாடு இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
விபத்து காரணமாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிரேன் உதவியுடன் பேருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் போக்குவரத்து சீரானது.
விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b