திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயக்கழிவு நீர் கலப்பு- பொதுமக்கள் அதிர்ச்சி
திருப்பூர், 27 மே (ஹி.ச.) திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயக்கழிவு நீர் கலந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக பின்னலாடை உற்பத்தி
சாய்க்கழிவு


திருப்பூர், 27 மே (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயக்கழிவு நீர் கலந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக பின்னலாடை உற்பத்தி விளங்கி வருகிறது. இதன் துணைத் தொழிலாக சாயப்பட்டறைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. பெரும்பாலான சாயப்பட்டறைகள் சுத்திகரிப்பு நிலையங்களுடன் இணைந்து ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் செயல்பட்டு வருகின்றன.

இருப்பினும், சில சாயப்பட்டறைகள் முறையாக சாயத்தண்ணீரை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பாமல், இரவு நேரங்களில் கள்ளத்தனமாக நொய்யல் ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்களான சங்கிலிப்பள்ளம், ஜம்பனையோடை உள்ளிட்ட பகுதிகளில் திறந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் சிவப்பு நிறத்தில் சாயக்கழிவு நீர் கலந்துள்ளது. ஆற்றை நம்பி வாழும் பொதுமக்கள் மட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் ஆற்றில் உள்ள பூச்சி, மீன்களை உணவாக உட்கொள்ளும் கொக்கு உள்ளிட்ட பறவைகளும் இந்த தண்ணீரை பருகுவதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பெயரளவிலேயே ஆய்வுக்கு வரும் அதிகாரிகள், சாயக்கழிவு நீர் ஆற்றில் கலந்துவிட்ட பிறகு, சாக்கடை நீர் செல்லும் நேரத்தில் மாதிரி நீரை சேகரித்து “இது சாயநீர் அல்ல” என விளக்கம் அளித்து செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, திருப்பூரின் முக்கிய நீர்வள ஆதாரமான நொய்யல் ஆற்றை மீண்டும் புத்துயிர் பெற்று வளமாக மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam