திருவாடானை அருகே மணல் கொள்ளை புகார் - போலீசார் மிரட்டியதாக குற்றச்சாட்டு
ராமநாதபுரம், 27 மே (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சட்டவிரோத மணல் திருட்டு குறித்து புகார் அளித்த நபரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தி மிரட்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம்
மணல் கொள்ளை


ராமநாதபுரம், 27 மே (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சட்டவிரோத மணல் திருட்டு குறித்து புகார் அளித்த நபரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தி மிரட்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்.

இவர் கடந்த ஒரு மாதமாக அப்பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தடுத்து நிறுத்தக் கோரி அவரது உறவினரான வினோத், எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், உள்ளூர் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து வினோத், அவசர போலீஸ் உதவி எண் 100-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு அறை தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மணல் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, புகார் அளித்த வினோத்தை காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர்.

அங்கு, “இந்தப் பிரச்சினையை இதோடு விட்டுவிடுங்கள், பெரிதாக்க வேண்டாம்” என்று கூறி சமாதானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, காவல் நிலையத்திலிருந்து வீடு திரும்பிய சில நிமிடங்களிலேயே, எஸ்.பி. பட்டினம் சார்பு ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் 4-க்கும் மேற்பட்ட போலீசார் வினோத்தின் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட எஸ்பி அலுவலகத்திலிருந்து ரகசிய தகவல் வந்துள்ளது” என்று கூறி போலீசார் சோதனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், சோதனையின் முடிவில் எந்தவித சட்டவிரோத பொருட்களும் சிக்கவில்லை.

இது குறித்து வினோத் கூறுகையில், “மணல் கடத்தல் குறித்து புகார் அளித்ததற்காக பழிவாங்கும் நோக்கில் போலீசார் பொய் தகவலை கூறி என் வீட்டில் சோதனை நடத்தினர்.

எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லை. மாவட்ட நிர்வாகமும் உயர் போலீஸ் அதிகாரிகளும் தலையிட்டு பாதுகாப்பு வழங்க வேண்டும். மணல் கொள்ளையர்களுக்கும், அவர்களுக்கு துணைபோகும் போலீசாருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிமாறனிடம் கேட்டபோது,

வினோத்திற்கும் கார்த்திக்குமிடையே குடும்ப பங்காளிப் பிரச்சினை உள்ளது. அதனால்தான் இவ்வாறு புகார் தெரிவிக்கிறார் என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவ இடத்தில் இருந்த மணல் ஒரு மாதத்திற்கு முன்பே கொட்டப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அங்கு இருந்த மணல் கடந்த இரண்டு நாட்களுக்குள் மட்டுமே கொட்டப்பட்டதாகத் தெரிகிறது என குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழக கனிமவளத்துறை அமைச்சரின் பக்கத்துத் தொகுதியிலும், சுற்றுச்சூழல் அமைச்சர் தொகுதியிலும் தொடர்ச்சியாக கனிமவள கொள்ளை நடைபெறுவதாகவும், அதை தட்டிக்கேட்கும் பொதுமக்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக தலையிட்டு நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam