Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 27 மே (ஹி.ச.)
உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம், பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் இலட்சக்கணக்கான பக்தர்களும், விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு, கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலம் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் மாதம் மாதம் வருகின்ற பௌர்ணமி தினத்தில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு கிரிவலம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதன்படி வைகாசி மாத பௌர்ணமி வருகிற 30 தேதி சனிக்கிழமை அன்று மதியம் 12.50 மணிக்கு தொடங்கி 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.41 மணி அளவில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொள்வதற்காக இலட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் மாட வீதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கோவில் இணை ஆணையர் உடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.
அருணாசலேஸ்வரர் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் பக்தர்களுக்கு வழங்கப்படும் குடிநீரை குடித்து பார்த்து ஆய்வு மேற்கொண்டு, அருகே உள்ள மருத்துவ முகாமிற்கு உள்ளே சென்றவர் அவசர காலங்களில் தேவைப்படும் மருந்து மாத்திரைகள் தேவையான அளவு இருப்பு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு, அவசர காலங்களில் வரும் நோயாளிகளை உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கோவிலில் நான்கு மாட வீதி மற்றும் கோவில் மதில் சுவரை சுற்றி உள்ள பகுதிகளில் பொது மக்கள் மற்றும் ஆன்மீக பக்தர்களுக்கு இடையூறாக உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுர வழியாக தரிசனம் செய்யும் பக்தர்களின் க்யூ லைன் வரிசையை ஆய்வு மேற்கொண்டு கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்களை கோவிலுக்குள் அனுப்ப வழிவகை செய்ய வேண்டு எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார்.
Hindusthan Samachar / ANANDHAN