தமிழ்நாட்டில் எந்த பேரமும் நடைபெறவில்லை - அமைச்சர் வன்னிஅரசு
விருதுநகர், 27 மே (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அயன்ரெட்டியாபட்டி உள்ள தனது வீட்டிற்கு தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற வன்னி அரசு வருகை தந்தார். அவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அள
Vanniarasu


விருதுநகர், 27 மே (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அயன்ரெட்டியாபட்டி உள்ள தனது வீட்டிற்கு தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற வன்னி அரசு வருகை தந்தார்.

அவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பள்ளியில் பயின்ற ஆசிரியர் மறைந்த சங்கரவேலு அவர்களின் திருஉருவ சிலையினை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து, அவரது வீட்டிற்கு வந்த அமைச்சருக்கு ஆராத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வன்னியரசு பேசியதாவது,

அமைச்சராக பொறுப்பேற்று முதன்முறையாக சொந்த ஊருக்கு வந்த உடன் உங்கள் மனம் மகிழ்ச்சி எப்படி உள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு,

இந்த மண்ணில் இருந்து தான் என்னுடைய பயணத்தை துவங்கினேன். மக்களுக்கு நன்றி சொல்ல நான் விரும்புகிறேன்.

கடந்த கால் நூற்றாண்டுக்கு இந்த சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற சாதியத்திற்கு எதிராக சனாதானத்திற்கு எதிராக தொடர்ந்து களமாடி வந்ததன் விளைச்சல் காரணமாக இந்த இடத்தில் வந்து நிற்கிறோம்.

சமூக நல்லிணக்கத்தை நோக்கி விடுதலை சிறுத்தைகள் களமாடி வருகிறோம். எல்லா மக்களையும் இணைக்கின்ற அமைச்சராக நான் செயல்படுவதற்கு இந்த மண்ணிலிருந்து நான் உறுதி ஏற்கிறேன் என கூறினார்.

மேகதாதுவின் குறுக்கு அணை கட்டியே தருவோம் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,

மேகதாதுவின் குறித்து அணை கட்டுவது என்பது தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு அவர்கள் செயல்படுகிறார்கள் என தொடர்ந்து நாங்கள் கூறி வருகிறோம்.

முதலமைச்சராக மு க ஸ்டாலின் இருந்தபோது கூட அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதை கூறியுள்ளோம்.

இது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிலைப்பாடு. இதை அங்கு இருக்க கூடிய முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்ந்து இரு மாநிலங்களுக்கு இடையான பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் நிலை உள்ளது.

மேகதாது அணை கட்டுவது என்பது மற்றொரு தேசிய இனத்திற்கு எதிராக செயல்பட கூடாது என்று தான் பார்க்க வேண்டும். மத்திய அரசு இதை தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என நாங்கள் பிரதமரிடம் கோரிக்கை வைக்கிறோம் என கூறினார் .

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்தடை இருப்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

இதை சரி செய்ய வேண்டும் மின்தடையால் பல்வேறு தரப்பு மக்கள் இது தொடர்பான கோரிக்கையை வைத்துள்ளார்கள். இந்த அரசு பொறுப்பேற்று பத்து நாட்கள் தான் ஆகிறது பல்வேறு இடையூறுகள் இருக்கின்ற தடைகள் அனைத்தையும் தாண்டி தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே அவகாசம் வேண்டும் என கேட்டுள்ளார்கள். அந்த அடிப்படையில் சிறிது அவகாசம் கொடுத்து சரி செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. கட்டாயம் இது நல்ல ஆட்சியாக மக்கள் விரும்பும் ஆட்சியாக எந்தவித பாகுபாடும் இல்லாத ஆட்சியாக தொடரும் என் என்பதில் மாற்று கருத்து இல்லை என கூறினார்.

அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தவெகவில் இணைவதால் குதிரை பேர ஆட்சி நடக்கிறது அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

அப்படி ஒன்றும் எனக்கு தெரியவில்லை தமிழ்நாட்டு அரசியல் இதுவரை நாகரீகமான அரசியலாக தான் நடந்து கொண்டிருக்கிறது. இப்போதும் அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது இந்த நாகரிக அரசியலுக்கு எதிராக எதுவும் நடக்காது.

அப்படி சொல்வது என்பது இந்த அரசுக்கு எதிராக உள்நோக்கத்துடன் சொல்கிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும். அப்படி எந்த பேரமும் இங்கு இல்லை. சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கூறினார் இது குதிரை பேர அரசு இல்லை குதிரை வேக அரசு என்று கட்டாயம் அதை நோக்கித்தான் நகரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என கூறினார்.

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ஏற்கனவே இடதுசாரிகள் உடன் இணைந்து விசிக போராட்டம் நடத்தியது. தேர்தல் வரை மத்திய அரசு அமைதியாக இருந்த நிலையில் தேர்தல் முடிந்த பின்பு விலையற்றத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே கச்சா பொருள் சம்பந்தமாக ரஷ்யாவுடன் போட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு முறித்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தகத்தோடு இணைந்து செயல்படுகிறது மத்திய அரசு.

ரஷ்யா உடன் குறைந்த விலைக்கு வாங்கிக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை முறித்து விட்டு கூடுதலாக அமெரிக்கா போடுகின்ற நிபந்தனையை ஏற்றுக்கொள்கிறது என்றால் யாருக்கு அடிமையாக இருக்கிறார்கள் யார் மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டி இருக்கிறது.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு அச்சுறுத்தலுக்கு அஞ்சி மோடி போன்றவர்கள் அடிபணிந்து இந்தியா அமெரிக்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளார்கள் மற்ற நாடுகள் விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைத்துள்ளது. எந்த திட்டத்தையும் செயல்படுத்தாத கையாலாகாத அரசாக மோடி அரசு உள்ளது என்பதை மக்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துகிறோம் என கூறினார்.

காவேரி குண்டாறு இணைப்பு சம்பந்தமாக நீண்ட காலமாக பிரச்சனை உள்ளது திருச்சுழி பகுதியில் காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தால் விவசாயம் செழிப்பாக இருக்கும் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

நிச்சியமாக இது தொடர்பாக அமைச்சரவையில் பேசுவோம். அந்தத் துறை சம்பந்தமான அமைச்சர் நிச்சயம் பதில் அளிப்பார். இது கட்டாயம் செய்யக்கூடிய திட்டம் தான் என கூறினார்.

பள்ளிகள் தொடங்க உள்ள நேரத்தில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற புகார் தொடர்ந்து எழுந்து வருகிறது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

முதலில் அமைச்சரவை கூடி இது குறித்து முடிவு செய்வார்கள் தனியார் பள்ளிகளில் தொடர்ந்து இது குறித்து புகார்கள் வருகின்றன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் இது பற்றி பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN