Enter your Email Address to subscribe to our newsletters

ஏற்காடு, 27 மே (ஹி.ச.)
ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஏற்காடு தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு 49-வது கோடை விழா கடந்த மே 22-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
விழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வண்ண மலர்களைக் கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
ரோஜா, சாமந்தி, டேலியா, லில்லி, ஆர்க்கிட் உள்ளிட்ட மலர்களால் உருவாக்கப்பட்ட யானை, மயில், படகு, நீர்வீழ்ச்சி போன்ற வடிவமைப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
மேலும், காய்கறி மற்றும் பழங்களால் செய்யப்பட்ட சிற்பங்கள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
கடந்த சில நாட்களாக விடுமுறை தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்து வருகின்றனர். பள்ளி விடுமுறை முடிவதற்குள் மலர் காட்சியை காண வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
இதனை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், மேலும் மூன்று நாட்களுக்கு, அதாவது மே 31-ஆம் தேதி வரை விழாவை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கூறுகையில்,
பொதுமக்களின் ஆர்வத்தையும், சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மலர் காட்சியை காணத் தவறியவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.
விழா நீட்டிப்பால் ஏற்காடு பகுதி வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மலர் காட்சி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வைக்கு திறந்திருக்கும்.
Hindusthan Samachar / vidya.b