மாரியம்மன் கோயில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கரூரில் இன்று உள்ளூர் விடுமுறை
கரூர், 27 மே (ஹி.ச) வரலாற்று சிறப்புமிக்க கரூர் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 27 நாட்கள் நடைபெறும் இந்த பெருவிழாவின் உச்சகட்ட நிகழ்வாக கருதப்படுவது கம்பம் ஆற்றில் விடும் வைபவமாகும்.
local holiday has been declared in Karur today


கரூர், 27 மே (ஹி.ச)

வரலாற்று சிறப்புமிக்க கரூர் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

27 நாட்கள் நடைபெறும் இந்த பெருவிழாவின் உச்சகட்ட நிகழ்வாக கருதப்படுவது கம்பம் ஆற்றில் விடும் வைபவமாகும்.

திருவிழாவின் தொடக்கத்தில் கோயில் முன்பாக நடப்பட்ட கம்பம், நேற்று இரவு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் கீழிறக்கப்பட்டது.

இன்று காலை மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்தை ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.

பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, கம்பத்தை ஆற்றில் விடுவது மரபு. மழை வேண்டியும், நோய்நொடி நீங்கி மக்கள் நலமுடன் வாழவும் இந்த வைபவம் நடத்தப்படுவதாக ஐதீகம்.

இந்த முக்கிய வைபவத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.

விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆற்றுப்பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

வைகாசி திருவிழாவின் இந்த நிறைவு நிகழ்வு கரூர் மாவட்ட மக்களின் கலாச்சார அடையாளமாகவும், மத நல்லிணக்கத்தின் சின்னமாகவும் திகழ்கிறது.

Hindusthan Samachar / vidya.b