Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மே (ஹி.ச.)
அதிமுகவில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வந்த உள்கட்சி மோதல் தற்போது சமரச நிலைக்கு சென்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இரு அணிகளும் ஒன்றுக்கொன்று எதிராக தாக்கல் செய்திருந்த தகுதி நீக்க மனுக்களை வாபஸ் பெற்றுள்ளன.
இதையடுத்து, இன்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு எதிராக, எஸ் பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இரு அணிகளும் ஒருவரை ஒருவர் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு அளித்திருந்தன.
இந்நிலையில், நேற்று எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், இபிஎஸ் இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் பின், இரு தரப்பினரும் சபாநாயகரை சந்தித்து தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர்.
ஆனால், இந்த சமரச சூழலிலும் சி.வி.சண்முகம் மட்டும் இபிஎஸ் அணியுடன் முழுமையாக இணைவதில் தயக்கம் காட்டி வருவதாகவும், தவெக தரப்புடன் தொடர்ந்து ஆலோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சண்முகம்–வேலுமணி அணியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்திருப்பதும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனால், அதிமுகவில் ஏற்பட்ட பிளவு தற்காலிகமாக சரியாகும் நிலை ஏற்பட்டாலும், சி.வி. சண்முகத்தின் அடுத்தகட்ட அரசியல் முடிவு தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam