Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 28 மே (ஹி.ச.)
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை சுமார் 13.30 கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த திட்டத்தில் பெருமளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும், சென்னை உயர்நீதிமன்றமும் இதுகுறித்து சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியபோதே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஐதராபாத்தை சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என வலியுறுத்தியதாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கு பின்னர் தூய்மையான நிர்வாகத்தை வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழக அரசு, முந்தைய திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பல ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்தது போல, இந்த ஒப்பந்தத்தையும் நிறுத்தும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் தற்போது அந்த நிறுவனம் முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டு வருவது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த உயர்மட்ட பாலத்திற்குத் தேவையான கர்டர்களை தயாரிப்பதற்காக, திருவிடந்தையில் உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோயிலுக்கு வழங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதையும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் ரூ.700 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். ரூ.1400 கோடியில் பணியை முடித்துத் தருவதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திலிப் பில்ட்காப் நிறுவனம் முன்வந்திருந்த போதிலும், ரூ.2100 கோடி மதிப்பில் கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து திலிப் பில்ட்காப் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பணி ஆணை வழங்க தடை விதித்திருந்ததையும், பின்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட பாலப் பணிகளை உடனடியாக நிறுத்தி, கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ