Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மே (ஹி.ச.)
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
இஸ்லாமிய பெருமக்கள் தற்போது பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், இந்த பண்டிகை காலத்தில் பொதுவெளியில் மாடுகளை வெட்டக்கூடாது என நீதிமன்ற உத்தரவு வந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ இஸ்லாமியர்கள் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு கிடைத்த பரிசு இதுதானா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். இனிமேல் இஸ்லாமியர்கள் திமுகவிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்கு சீர் கொண்டு சென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சீமான் மனைவி சிறுவயதிலிருந்தே எனக்கு தங்கை போன்றவர். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால், ஒரு சகோதரனாக சீர் கொண்டு சென்றேன். இதற்கு எங்கள் தலைவரும் வாழ்த்து தெரிவித்தார்” என்றார்.
கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் கனிம வள லாரிகள் நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து பேசிய அவர், “கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்லக்கூடாது என்று நான் கூறவில்லை. நாகர்கோவிலுக்கு சென்றபோது 400-க்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக நின்றன. ஓட்டுநர்களிடம் கேட்டபோது, மூன்று முதல் நான்கு நாட்களாக காத்திருக்கிறோம் என்றும், அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளன என்றும் தெரிவித்தனர்” என்றார்.
“அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் போது லாரிகளை தடுத்து நிறுத்தக் கூடாது. எந்த அரசும் தேவையற்ற தடைகள் விதிக்கக் கூடாது என்பதைத்தான் நான் கூறினேன். கேரளாவும் இந்தியாவின் ஒரு பகுதிதான். அங்கு கொண்டு செல்லுங்கள் என்று நான் கூறவில்லை” என்றும் விளக்கமளித்தார்.
மேலும், “கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று மனோ தங்கராஜ் கூறியுள்ளார். ஆனால், உரிய அனுமதியுடன் கனிம வளங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதே என் கருத்து.
நாகர்கோவில் பகுதியில் கட்டிடப் பணிகளுக்கும் இதுபோன்ற வளங்கள் தேவைப்படுகின்றன.
இந்த விவகாரத்தில் சகோதரர் மனோ தங்கராஜ் மனக்குழப்பத்தில் உள்ளார்” என அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ