Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மே (ஹி.ச.)
சென்னையில் நண்பர் வீட்டில் மது அருந்தியபோது, அங்கு தங்கி இருந்த 16 வயது சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ்காரர் உட்பட இருவரை அசோக் நகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோயிலை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது பெற்றோர் மற்றும் அக்காவுடன் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 25ஆம் தேதி குடும்பத்தினருடன் சென்னை வந்த சிறுவன், கோடம்பாக்கம் பகுதியில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
பின்னர் மறுநாள் குடும்பத்தினருடன் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் உறவினர் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இதையடுத்து, சிறுவன் மேலும் இரண்டு நாட்கள் மாமா வீட்டில் தங்கி இருப்பதாக கூறியதால், பெற்றோர் அவரை அங்கு விட்டுவிட்டு நாகர்கோயிலுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், சிறுவன் தூங்கி கொண்டிருந்தபோது, அவரது மாமா தனது நண்பரை வீட்டிற்கு அழைத்து வந்து இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. போதை அதிகரித்த நிலையில், மாமா அங்கேயே தூங்கிவிட்டதாக தெரிகிறது.
அப்போது மதுபோதையில் இருந்த அவரது நண்பர், சிறுவனை எழுப்பி மீதமிருந்த மதுவை வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் அருகில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து அந்த நபரின் முகத்தில் அடித்து விட்டு, வெளியே ஓடி சென்று அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை செய்த நபர் வேலப்பன்(35) என்பது தெரியவந்தது. அவர் அசோக் நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவல்துறை தலைமை காவலர் என்றும், தற்போது வடபழனி காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனின் மாமாவும் காவலர் வேலப்பனின் நண்பர் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் ஒன்றாக மது அருந்திய நிலையில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அசோக் நகர் போலீசார், காவலர் வேலப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் சிறுவனின் மாமாவிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam