சிஎம்டிஏ அலுவலகத்தில் புதிய கட்டுப்பாடுகள் – பார்வையாளர்களுக்கு நேர வரம்பு, ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்
சென்னை, 28 மே (ஹி.ச) சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ அலுவலகத்தில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஒழுங்குகளை வலுப்படுத்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ தலைமை அலுவலகத்தில், செல்லுபடியாகும் நுழைவு அன
Cmda


சென்னை, 28 மே (ஹி.ச)

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ அலுவலகத்தில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஒழுங்குகளை வலுப்படுத்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ தலைமை அலுவலகத்தில், செல்லுபடியாகும் நுழைவு அனுமதிச் சீட்டு பெற்ற பின்னரே அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த நடைமுறைகளை மீறி பார்வையாளர்கள் அனுமதியின்றி அலுவலக வளாகத்திற்குள் சுதந்திரமாக நடமாடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அலுவலக வளாகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, வழக்கமான நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக சிஎம்டிஏ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பார்வையாளர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தவும் புதிய வழிகாட்டுதல்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, செல்லுபடியாகும் நுழைவு அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை மட்டுமே உறுப்பினர் செயலரை சந்திக்க அனுமதிக்கப்படுவர்.

மேலும், அனைத்து ஊழியர்களும் அலுவலக வளாகத்திற்குள் இருக்கும்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களிடமிருந்து ஊழியர்களை எளிதில் அடையாளம் காண உதவும் என கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியாளர்கள், வருகை மற்றும் வெளியேறும் பார்வையாளர்களின் விவரங்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்றும், அனுமதிச் சீட்டு இல்லாமல் வளாகத்திற்குள் காணப்படும் நபர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், விடுமுறை நாட்களில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ள முன் அனுமதி பெற வேண்டும் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த செயல் பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும், விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ