தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேச பல்லக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மயிலாடுதுறை, 28 மே (ஹி.ச.) சைவ சமயத்தின் தொன்மையான மடங்களில் ஒன்றான மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் மிகச் சிறப்பு வாய்ந்த பட்டினப்பிரவேச பல்லக்கு உற்சவத் திருவிழா, இன்று காலை வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சும
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேச பல்லக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


மயிலாடுதுறை, 28 மே (ஹி.ச.)

சைவ சமயத்தின் தொன்மையான மடங்களில் ஒன்றான மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் மிகச் சிறப்பு வாய்ந்த பட்டினப்பிரவேச பல்லக்கு உற்சவத் திருவிழா, இன்று காலை வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதுமான அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயிலில், 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இன்று காலை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் 11 நாட்களுக்கு விழா நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் ஜூன் 7-ம் தேதி பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. அன்றைய தினம் தருமபுரம் ஆதீனம் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட சிவிகை பல்லக்கில் எழுந்தருளி, நான்கு வீதிகளிலும் பட்டினப்பிரவேசம் கொள்வார்.

இந்த நிகழ்வின்போது ஆதீனகர்த்தரை சீடர்கள் பல்லக்கில் சுமந்து செல்வது மரபு. சைவ நெறியையும், தமிழ் மரபையும் பறைசாற்றும் இந்த நிகழ்வைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சைவப் பெருமக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

11 நாள் விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருமுறை பாராயணம், சமய சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

விழா ஏற்பாடுகளை ஆதீன நிர்வாகத்தினர் மற்றும் திருக்கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b