Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மே (ஹி.ச.)
பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இறை நம்பிக்கை கொண்டவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் திருநாளான பக்ரீத்தை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய முன்வந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவு கூரும் நாளே பக்ரீத் திருநாள் என்றும், இறைவனின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை நெறி என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் நாள் இதுவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் அதர்மம், அநீதி, சூழ்ச்சி மற்றும் வன்மம் போன்றவற்றை முற்றிலும் ஒழிக்க, நற்சிந்தனைகள் மற்றும் நல்லொழுக்கங்கள் வெற்றி பெற தியாகமும் அர்ப்பணிப்பும் அவசியம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இறைத்தூதரின் தியாக உணர்வை மனதில் நிறுத்தி, மனிதநேயம் வளர அர்ப்பணிப்பு உணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும், பக்ரீத் திருநாளில் அதற்கான உறுதியை ஏற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகில் அன்பும் அமைதியும் நிலவிட, அனைவரும் மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் தியாகச் சிந்தனையுடன் வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்வழியில் தனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P