தங்க நகை அடகு பெயரில் ரூ.40 லட்சம் மோசடி – 3 பேர் கைது
சென்னை, 28 மே (ஹி.ச.) சென்னை மாம்பலம் பகுதியில் தனியார் வங்கியில் அடகு வைத்திருந்த தங்க நகைகளை மீட்டு, மற்றொரு தனியார் அடகு நிறுவனத்தில் மீண்டும் அடகு வைப்பதாக கூறி ரூ.40.06 லட்சம் மோசடி செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கொ
Theft


சென்னை, 28 மே (ஹி.ச.)

சென்னை மாம்பலம் பகுதியில் தனியார் வங்கியில் அடகு வைத்திருந்த தங்க நகைகளை மீட்டு, மற்றொரு தனியார் அடகு நிறுவனத்தில் மீண்டும் அடகு வைப்பதாக கூறி ரூ.40.06 லட்சம் மோசடி செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொளத்தூரை சேர்ந்த விஜயகுமார் (43) என்பவர் தனியார் தங்க நகை அடகு நிறுவனத்தில் ஏஜென்டாக பணியாற்றி வருகிறார். மேடவாக்கம் கிளை மேலாளர் மூலம் அறிமுகமான ராதாகிருஷ்ணன், அசன் அலி உள்ளிட்டோர், தி.நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்திருந்த தங்க நகைகளை மீட்டு மீண்டும் அடகு வைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

அதன்படி, கடந்த 18ஆம் தேதி விஜயகுமார் தி.நகர் வங்கி கிளைக்கு சென்று ராதாகிருஷ்ணன் கணக்கில் ரூ.40.06 லட்சம் வரவு வைத்துள்ளார். ஆனால், பணம் வரவு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே ராதாகிருஷ்ணன் செல்போனை அணைத்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விஜயகுமார் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததில் ரூ.24.06 லட்சம் முடக்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள ரூ.16 லட்சம் ஏற்கனவே திட்டமிட்டு காசோலை மூலம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து R-1 மாம்பலம் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தொடர்புடைய ராதாகிருஷ்ணன் (41), அசன் அலி (57), தீபக் (35) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இழந்த பணத்தை மீட்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட 3 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ