ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இன்று செயல்படாது - மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு
புதுச்சேரி, 28 மே (ஹி.ச.) இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஜவகர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இன்று முழுமையாக செயல்படாது
JIPMER Outpatient Department will not function today


புதுச்சேரி, 28 மே (ஹி.ச.)

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி ஜவகர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இன்று முழுமையாக செயல்படாது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் விடுமுறை பட்டியலில் பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், வழக்கமாக காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும் புறநோயாளிகள் பிரிவு, சிறப்பு கிளினிக்குகள், ஆய்வக மாதிரி சேகரிப்பு மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் ஆகியவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் புதிதாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும், தொடர் சிகிச்சைக்கான மறுபரிசோதனைக்கு வருவோரும் நாளை முதல் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

அதேவேளையில் உயிர்காக்கும் அத்தியாவசிய சேவைகளான அவசர சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அதிர்ச்சி சிகிச்சை மையம், தீவிர சிகிச்சை பிரிவுகள், பிரசவ வார்டு, உள்நோயாளிகள் வார்டுகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியவை 24 மணி நேரமும் வழக்கம்போல் முழு வீச்சில் இயங்கும் என ஜிப்மர் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 0413-2296006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பண்டிகை விடுமுறை முடிந்து நாளை வெள்ளிக்கிழமை முதல் புறநோயாளிகள் பிரிவு மீண்டும் வழக்கமான நேரப்படி செயல்படத் தொடங்கும். எனவே, அவசரமற்ற மருத்துவ தேவைகளுக்கு நோயாளிகள் நாளை வருமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b