Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 28 மே (ஹி.ச.)
உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில், முதல் நாள் உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தங்கம், வெள்ளி மற்றும் வைடூரிய திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க சப்பர வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், பட்டாச்சாரியார்கள் வெண்சாமரம் வீச காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதிகாலை முதலே திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் முக்கிய வீதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Hindusthan Samachar / GOKILA arumugam