Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 28 மே (ஹி.ச.)
கர்நாடக அரசியலில் நீண்டநாளாக பேசப்பட்டு வந்த அதிகார மாற்றம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று பதவி விலக உள்ளதாக கூறப்படுவதுடன், புதிய முதல்வராக டிகே சிவகுமார் பதவியேற்க உள்ளார் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 224 தொகுதிகளில் 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. தேர்தல் வெற்றிக்குப் பின்னர் முதல்வர் பதவிக்கான போட்டியில் இரண்டு முக்கிய முகங்கள் முன்னிலையிலிருந்தன. ஒருவர் மூத்த தலைவர் சித்தராமையா; மற்றொருவர் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார்.
கர்நாடக அரசியலில் லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமூகங்களின் ஆதரவு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த டிகே சிவகுமார், கட்சியை எதிர்க்கட்சிக் காலத்தில் ஒருங்கிணைத்து வெற்றிக்குக் கொண்டு வந்த தலைவராக பார்க்கப்பட்டதால், அவரே முதல்வராக வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் காங்கிரஸ் மேலிடம் அனுபவம், நிர்வாகத் திறன் மற்றும் சமூக ஆதரவு சமநிலையை கருத்தில் கொண்டு சித்தராமையாவை முதல்வராக தேர்வு செய்தது.
அதேநேரம், அதிகாரப் பகிர்வு தொடர்பாக இரண்டரை ஆண்டு–இரண்டரை ஆண்டு என்ற ‘பார்முலா’ குறித்து அப்போது அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது. இருப்பினும், இந்த உடன்பாட்டை காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
இந்நிலையில், சித்தராமையா ஆட்சிக்காலம் மூன்று ஆண்டுகளை எட்டியதாக கூறப்படும் சூழலில், “வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்” என டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் கோரிக்கை வலுப்படுத்தினர். இதன் விளைவாக கர்நாடக காங்கிரஸில் சித்தராமையா அணியும், டிகே சிவகுமார் அணியும் என உள்கட்சி பிரிவினை வெளிப்படையாக தெரியத் தொடங்கியது. சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் தனித்தனி அணிகளாக செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கிடையில், சித்தராமையாவுக்கு தேசிய அரசியலில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வியூகத்தை வலுப்படுத்தும் பொறுப்பு அல்லது அகில இந்திய அளவிலான அமைப்பு பொறுப்பு அவருக்கு வழங்கப்படலாம் என்ற ஊகங்களும் உலா வருகின்றன.
கர்நாடகாவில் இந்த மாற்றம் உறுதியாகும் பட்சத்தில், அதன் தாக்கம் மாநில அரசியலைத் தாண்டி தேசிய காங்கிரஸ் கட்சியின் எதிர்கால அதிகார சமநிலையிலும் பிரதிபலிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P