Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மே (ஹி.ச.)
“நீதித்துறையில் கருப்பு ஆடுகள் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது எனவும் நீதிபதிகளை புனிதர்களாக கருத வேண்டிய அவசியம் இல்லை” எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நீதித்துறையை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி ‘கருப்பு’ திரைப்படத்தை தடை செய்யக் கோரி வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு கடந்த வாரம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்த வழக்கில் தற்போது வெளியிடப்பட்ட விரிவான உத்தரவில் பல முக்கிய கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
அதில், “கருப்பு திரைப்படத்தின் கதைக்களம் ஏழு கிணறு பகுதியில் உள்ள ஒரு கற்பனை நீதிமன்றத்தை மையமாகக் கொண்டது. அதில் தலைமை நீதிபதி ஊழல்வாதியாகவும், தொழில் நெறிமுறையற்ற வழக்கறிஞர் நீதிமன்ற செயல்பாடுகளில் செல்வாக்கு செலுத்துபவராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
நீதித்துறையில் ஊழல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஊழல் நீதிபதிகள் இருந்துள்ளனர்; இப்போதும் இருக்கிறார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், “நீதிபதிகளை புனிதமானவர்களாக கருத வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீதித்துறை முழுவதும் ஊழல் நிறைந்தது என்ற கருத்தை ஏற்க முடியாது. நீதித்துறையில் கருப்பு ஆடுகள் இருப்பதை நீதிமன்றமே அறிந்திருக்கிறது. அவற்றை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
திரைப்படங்கள் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளுடன் உருவாக்கப்படுவது இயல்பானது என்றும், “தமிழ் சினிமாவில் கதாநாயகன் தனியாக பல வில்லன்களை வீழ்த்துவார். அதுபோல ‘கருப்பு’ படத்தையும் ஒரு கலைப் படைப்பாகவே பார்க்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், “கருத்து சுதந்திரம் என்பது ஒருவரின் கருத்தை படம், எழுத்து, பேச்சு உள்ளிட்ட எந்த வடிவிலும் வெளிப்படுத்தும் உரிமையை உள்ளடக்கியது. ஒரு கலைஞரின் படைப்பாற்றல் மதிக்கப்பட வேண்டும். அவர் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழையாதவரை, அவரது படைப்பில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
‘கருப்பு’ திரைப்படம் நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும், தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அதில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், “ஆர்.கே.நாராயணனின் ‘மால்குடி’ போலவே, ‘கருப்பு’ படத்தில் வரும் ஏழு கிணறு நீதிமன்றமும் கற்பனையானது. கற்பனையான நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி ஊழல்வாதியாக சித்தரிக்கப்படுவது மட்டும் நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது” எனவும் விளக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ‘கருப்பு’ திரைப்படத்தை தடை செய்யக் கோரிய மனுவில் முகாந்திரம் இல்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam