Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மே (ஹி.ச.)
எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டிருந்த நிலையில், நேற்று (27-06-26) இருதரப்பும் சமாதானத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கும் இடையே சமாதானம் எட்டப்பட்டது. அதனை தொடர்ந்து, இருதரப்பினரும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் ஒன்றாக கடிதம் அளித்தனர்.
அதில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அதிமுக கொறடாவாகவும் நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் மனு அளித்தனர்.
மேலும், சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியையும், அதிமுக கொறடாவாக விஜயபாஸ்கரையும் நியமிக்கக் கோரியை மனுவை எஸ்.பி. வேலுமணி தரப்பினர் வாபஸ் பெற்றனர்.
அதே போல், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை மனுவை எடப்பாடி பழனிசாமி தரப்பு வாபஸ் பெற்றனர். இதன் மூலம், இரண்டாக பிளவுப்பட்ட அதிமுக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஒருங்கிணைந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இன்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில், வரவிருக்கும் உள்ளாட்சி அமைப்பு இடைத்தேர்தல், கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாக மாற்றங்கள் மற்றும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b