கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நள்ளிரவில் திடீர் ஆய்வு
சென்னை, 28 மே (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அதிகாரிகளுடன் இரவு நேர ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள், பயணிகளுக்க
பார்த்திபன்


சென்னை, 28 மே (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அதிகாரிகளுடன் இரவு நேர ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள், பயணிகளுக்கான வசதிகள் மற்றும் பேருந்துகளின் இயக்க நிலை குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் ஆய்வு செய்தார்.

மேலும் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது அமைச்சரை சந்தித்த பொதுமக்கள் மற்றும் பயணிகள், அரசு பேருந்துகள் நேரத்திற்கு வராததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

சில முக்கிய வழித்தடங்களில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வெளியூர்ப் பயணிகள் அவதியடைந்து வருவதாகவும் கூறினர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட அமைச்சர், பயணிகளின் சிரமங்களை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,

பழைய பிரச்சினைகளை பேச வேண்டாம், இனிமேல் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது. தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என கூறினார்.

அப்போது அங்கிருந்த பயணி ஒருவர் திடீரென பேசியபோது,

சென்னையிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகரப் பேருந்து வசதி இல்லை. இதனால் ஒரு மணி நேரமாக காத்திருக்கிறோம்.

தனியார் பேருந்துகள் மட்டும் வடபழனி வழியாக ஜிஎஸ்டி சாலையில் இயக்கப்படுகின்றன.

ஆனால் அரசு பேருந்துகள் மதுரவாயில் பைபாஸ் வழியாக வருவதால் சிரமம் ஏற்படுகிறது என குற்றச்சாட்டு முன் வைத்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P