Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மே (ஹி.ச)
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை வெளி முகமைகள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த சில நாட்களாக கடைகளை அடைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மாநிலம் முழுவதும் மதுபான விற்பனை பாதிக்கப்பட்டு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். டாஸ்மாக் நிர்வாகத்துடன் தொடர்புடைய அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சர் தலைமையிலான இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் பங்கேற்க உள்ளனர்.
போராடும் ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக, காலி மதுபாட்டில்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பப் பெறும் பணியை டாஸ்மாக் ஊழியர்கள் மேற்கொள்வதற்கு பதிலாக, தனியார் வெளி முகமைகள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பணிச்சுமை குறைவதோடு, பாட்டில் திரும்பப் பெறும் திட்டமும் முறையாக செயல்படும் என ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b