Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மே (ஹி.ச.)
சென்னை மாநகரில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் வெப்ப அலையிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக வெயிலில் வெளியே வேலை செய்வோர், இருசக்கர வாகன ஓட்டிகள், வியாபாரிகள் ஆகியோர் இந்த அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது.
வெயிலில் வேலை செய்யும் பொழுது தாகம் எடுக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது மாநகராட்சியின் முதன்மையான அறிவுரையாக உள்ளது. உடலில் நீர்ச்சத்து குறைந்த பிறகு தண்ணீர் குடிப்பதை விட, முன்கூட்டியே அடிக்கடி நீர் அருந்துவது வெப்ப அயர்ச்சியை தடுக்கும்.
அதேநேரம், டீ, காபி போன்ற சூடான பானங்கள் உடல் வெப்பத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக உடலுக்கு குளிர்ச்சி தரும் மோர், இளநீர், அரிசிக்கஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் ஓ.ஆர்.எஸ் உப்பு கரைசலை பருகுவது சிறந்தது. இவை வியர்வை மூலம் உடலிலிருந்து வெளியேறும் உப்புச்சத்தை ஈடுசெய்து, நீரிழப்பை தடுக்க உதவும்.
மேலும், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான உச்ச வெயில் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க முடியாதவர்கள், தலையில் கட்டாயம் பருத்தி துணி, கைக்குட்டை, துண்டு அல்லது அகலமான தொப்பி அணிந்து செல்ல வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இலகுவான, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிவது வெயிலின் தாக்கத்தை குறைக்கும். வேலை செய்யும் போது திடீரென களைப்பு, தலைவலி, தலைசுற்றல், குமட்டல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக வேலையை நிறுத்திவிட்டு, நிழலான அல்லது காற்றோட்டமான இடத்திற்கு சென்று ஓய்வெடுக்க வேண்டும். உடலை ஈரத்துணியால் துடைத்துக்கொள்வது வெப்பத்தை தணிக்கும்.
இதையும் மீறி மயக்கம், உடல் முழுவதும் அதீத சோர்வு, கட்டுப்படுத்த முடியாத தாகம், வயிற்றுவலி, தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது வெப்ப தாக்கின் ஆரம்பமாக இருக்கலாம் என்பதால், உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனையை அணுக வேண்டும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் இதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மதிய வேளையில் வெளியே செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வெப்ப அலை பாதிப்பு தொடர்பான அவசர மருத்துவ உதவிக்கு 104 என்ற எண்ணையும், மாநகராட்சி உதவிக்கு 1913 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b