Enter your Email Address to subscribe to our newsletters

திருச்செந்தூர், 28 மே (ஹி.ச.)
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சிறப்பு அஞ்சல் முத்திரை வைகாசி விசாகப் பெருந்திருவிழா நன்னாளான வரும் 30ஆம் தேதி சனிக்கிழமை வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் செ.சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய அஞ்சல் துறை சார்பில் நாட்டின் மிக முக்கியப் பாரம்பரிய, கலாசார மற்றும் வரலாற்றுப் பெருமை வாய்ந்த சுற்றுலாத் தலங்களைச் சிறப்பிக்கும் நோக்கில் 'நிரந்தரச் சித்திர அஞ்சல் முத்திரை' வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு முத்திரை என்பது, குறிப்பிட்ட அந்த அஞ்சலகங்களிலிருந்து பொதுமக்களால் அனுப்பப்படும் கடிதங்கள் மற்றும் தபால்களில் வழக்கமாகக் குத்தப்படும் சாதாரணத் தேதி முத்திரைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஒரு தனித்துவமான சிறப்பு அஞ்சல் முத்திரையாகும்.
அஞ்சல் துறை தமிழ்நாடு வட்டத்தின் சார்பில், தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் பெருமைகளையும் போற்றும் வகையில், அந்தந்த ஆறு திருத்தலங்களுக்கும் இத்தகைய சிறப்புமிக்கச் சித்திர அஞ்சல் முத்திரைகளை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் திருவுருவம் பொதிந்த சிறப்பு நிரந்தரச் சித்திர அஞ்சல் முத்திரை, வரும் சனிக்கிழமை (மே 30) வைகாசி விசாகத் திருநாளில் முறைப்படி வெளியிடப்படவுள்ளது.
இதற்கான விசேட வெளியீட்டு விழா திருச்செந்தூர் தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அஞ்சல் முத்திரை வெளியீட்டு விழாவில் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சல் தலை சேமிப்பு ஆர்வலர்களும், ஆன்மீகப் பக்தர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தூத்துக்குடி கோட்ட அஞ்சல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b