ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருத்தேரோட்டத்திற்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
விருதுநகர் , 28 மே (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் நடைபெற உள்ள ஆடிப்பூர திருத்தேரோட்டத்திற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விள
ஆண்டாள் கோவில்


விருதுநகர் , 28 மே (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் நடைபெற உள்ள ஆடிப்பூர திருத்தேரோட்டத்திற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில், ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களால் பக்தர்களிடையே பெரும் புகழ் பெற்றதாகும். குறிப்பாக பங்குனி உத்திர திருக்கல்யாணம், மார்கழி நீராட்டு உற்சவம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தினமான ஆடிப்பூர தேரோட்டம் ஆகியவை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.

இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர திருத்தேரோட்ட விழாவை முன்னிட்டு, தேருக்கு நாள் செய்யும் பூர்வாங்க பணியான “முகூர்த்தக்கால்” நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

அப்போது ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் எழுந்தருளும் திருத்தேரில் வேத மந்திரங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் முகூர்த்தக்கால் ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஆண்டாள் கோவில் முன்பாக ஆடிப்பூர கொட்டகை அமைப்பதற்கான முகூர்த்தக்காலும் ஊன்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா தேதிகளும் அறிவிக்கப்பட்டன. வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆடிப்பூர விழா தொடங்குகிறது. விழாவின் 9ஆம் திருநாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி திருவாடிப்பூர திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

முன்னதாக இன்று காலை ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam