Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 28 மே (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (பி.எம்-கிசான்) திட்டத்தின் கீழ் பயனடையும் விவசாயிகள், தங்களது நில உடைமை விவரங்களை வரும் மே 30-ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 மூன்று தவணைகளாக நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
தற்போது அடுத்த தவணைத் தொகையைப் பெறுவதற்கு நில உடைமை சரிபார்ப்பு மற்றும் பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 33,943 விவசாயிகள் தங்களது விவரங்களை முறையாகப் பதிவு செய்து திட்டத்தின் பலன்களைப் பெற்று வருகின்றனர்.
எனினும், தகுதியுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள மேலும் 4,332 விவசாயிகள் இன்னும் நில உடைமை பதிவை மேற்கொள்ளவில்லை.
இவர்கள் தவணைத் தொகையை இழக்கும் நிலை ஏற்படாமல் இருக்க, மே 30-ஆம் தேதிக்குள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள், வேளாண்மை அலுவலகங்கள் அல்லது பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே திட்டத்தில் இணைந்து, ஏதேனும் காரணங்களால் தவணைத் தொகையைப் பெறாதவர்களும் இந்த காலக்கெடுவுக்குள் தங்களது விவரங்களைச் சரிபார்த்து, தேவையான ஆவணங்களைப் புதுப்பித்து விண்ணப்பிக்கலாம்.
காலதாமதம் செய்யும் பட்சத்தில் அடுத்த தவணைப் பணம் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதால், விவசாயிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b