Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மே (ஹி.ச)
தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு முறையில் வெளிப்படையாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு பதவிகளில் பணிபுரியும் ஊழியர்கள், பணியிட மாறுதல் கோரி உயரதிகாரிகளின் முன் அனுமதியின்றி அமைச்சர் அலுவலகத்தை நேரடியாக அணுகுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, அனைத்து பணியிட மாறுதல்களும் கலந்தாய்வு முறையிலேயே மேற்கொள்ளப்படும் என்றும், காலிப் பணியிடங்களின் முழு விவரங்களும் கலந்தாய்வு நடைபெறும் முன்பே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணியாளர்கள் விதிமுறைகளை பின்பற்றி துறை சார்ந்த நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தேவையற்ற முறையில் அமைச்சர் அலுவலகத்தை அணுகுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ