Enter your Email Address to subscribe to our newsletters

கும்பகோணம், 28 மே (ஹி.ச)
தஞ்சாவூர்-மயிலாடுதுறை சாலையை இணைக்கும் முக்கிய பகுதியில் தமிழக வெற்றி கழகத்தினர் அனுமதி பெறாமல் நேற்று முன் தினம் இரவு பேனர் ஒன்றை அமைத்திருந்தனர்.
அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தேவேந்திரன், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அந்த பேனரை அகற்ற முயன்றார்.
அப்போது அங்கு வந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவலர் தேவேந்திரனின் கை முறிந்தது. தாக்குதலில் ஈடுபட்ட த.வெ.க வினர் தப்பிச் சென்றுள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்த காவலரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த அருண், வயது 21, மற்றும் காளி, வயது 30, ஆகிய இருவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அனுமதியின்றி பொது இடங்களில் பேனர் வைப்பதும், அதனை தட்டிக்கேட்கும் அரசு அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் சட்டப்படி குற்றம் என காவல்துறை எச்சரித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b