பக்ரீத் பண்டிகை விடுமுறை எதிரொலி - உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
கள்ளக்குறிச்சி, 28 மே (ஹி.ச.) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர
போக்குவரத்து நெரிசல்


கள்ளக்குறிச்சி, 28 மே (ஹி.ச.)

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சுங்கச்சாவடியாக விளங்கி வரும் செங்குறிச்சி சுங்கச்சாவடி வழியாக திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதால், இன்று அதிகாலை முதலே சுங்கச்சாவடியில் வாகனங்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இதன் காரணமாக சுங்கச்சாவடியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கார்கள், பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நேரம் செல்ல செல்ல வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கியமான சுங்கச்சாவடியாக செங்குறிச்சி சுங்கச்சாவடி விளங்கி வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam